கோவை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் எம்.கிருஷ்ணன் கூறியதாவது: கோவை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தில் பலகாரங்களை தயாரிக்கும் ஊழியர்கள் முகக்கவசம், கையுறைகள் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, அடிக்கடி கைகளை கழுவுவது போன்ற பாதுகாப்பு அம்சங்களை கடைபிடித்து வருகிறார்கள். இங்கு தயாரிக்கப்படும் பலகாரங்கள் 8 முதல் 10 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம். சுவையும், தரமும் குறையாது. ஆனாலும் உற்பத்தியான பலகாரங்களை 48 மணி நேரத்தில் வாடிக்கையாளர்களிடம் கொடுத்து விடுகிறோம்.
48 மணி நேரம் கடந்த பலகாரங்களை விற்பனை செய்ய வேண்டாம் என்று முடிவு செய்து உள்ளோம். அந்த பலகாரங்களை சாப்பிடுவதற்கான கால அளவு மேலும் சில நாட்கள் இருக்கிறது. எனவே உணவு பொருட்களை வீணாக்காமல் மக்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் 5 அரசு சாரா தொண்டு நிறுவனங்களுடன் இணைத்து உள்ளோம். 48 மணி நேரத்துக்குள் விற்காத பலகாரங்களை இவர்களிடம் வழங்கி, ஆதரவற்றோர் மற்றும் முதியோர் இல்லங்களுக்கு சென்று சேர வழிவகை செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இதற்காக நோபுட் வேஸ்ட், நிழல்கள், ஸ்ரீ பாண்டி துர்கா சாயிபாபா சேவை மைய அறக்கட்டளை, மாற்றுத்திறனாளிகளுக்கான யுனைடட் ஆர்பனேஜ், யுனிவர்சல் பிஸ் பவுண்டேசன் ஆகிய அமைப்புகளுடன் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் எம். கிருஷ்ணன் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. இதில் பலர் கலந்து கொண்டனர்.