கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையில் பணி புரியும் நியமன அலுவலர் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கு.இராசாமணி அவர்கள் மடிக்கணினிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் தமிழ்செல்வன், உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில்,நுகர்வோர் உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழான சட்டக் கூறுகள் குறித்து பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நுகர்வோர் பாதுகாப்பு என்பது இத்துறையின் மிக முக்கியத்துவம் வாய்ந்த அங்கமாக விளங்குகிறது. நுகர்வோரின் பாதுகாப்பிற்காக போதிய அதிகாரத்துடன் கூடிய தகுதி வாய்ந்த நுகர்வோர் குறைதீர் ஆணையங்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் நுகர்வோர் குறைகள் உடனுக்குடன் நிவர்த்தி செய்யப்பட்டு நுகர்வோரின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.
உணவு பாதுகாப்பு துறையின் உரிமம் மற்றும் பதிவுகளை ஆய்வு செய்யவும், கள ஆய்வு செய்து விவரங்களை பதிவிடவும், தினசரி அறிக்கைகளை அனுப்பவும், உணவு பாதுகாப்பு துறைக்கு வரும் புகார்கள் மற்றும் விண்ணப்பங்களை களத்திலேயே சென்று ஆய்வு செய்து உடனுக்குடன் அறிக்கை அனுப்ப ஏதுவாகவும், உணவு மாதிரிகள் எடுக்கப்பட்ட விவரங்களை பதிவிடவும், உணவு மாதிரிகளின் ஆய்வு அறிக்கை பதிவிடவும், குடிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகளின் விவரங்களை பதிவு செய்து வைக்கவும் உதவும் வகையில் மடிக்கணினி உணவு பாதுகாப்புத் துறைக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் அவர்களது பணிகளை விரைவாக செய்ய முடியும். நுகர்வோர்கள் அளிக்கும் புகார்கள் மற்றும் விண்ணப்பங்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கு.இராசாமணி அவர்கள் தெரிவித்தார்.