எனது ஆசானை நினைக்கும் போது கண்ணதாசன் எழுதிய கவிதை வரிகள் என் நினைவிற்கு வருகின்றன, “அம்மா என்றால் அன்பு, அப்பா ஏன்றால் அறிவு ஆசான் என்றால் கல்வி, அவரே உலகில் தெய்வம்”, எத்தனை பொருள் செறிந்த வரிகள்.
தற்போது எனக்கு வயது 69 வெள்ளக்கிணறு கிராமத்தில் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்தவன். அப்போது எங்கள் கிராமத்தில் உள்ள பள்ளியில் வசதி இல்லை. எனவே கோவையில் உள்ள தூய மைக்கேல் பள்ளியில் படித்தேன். கணக்கு பாடத்தில் நான் சுமார் தான். ஆனால் என் கனவெல்லாம் பொறியியல் பட்டதாரி ஆக வேண்டும் என்பதே. எனக்கு கணக்கு பாடம் எடுத்தவர் கே.சுப்ரமணியன் (KS). என் ஆதங்கத்தை அவரிடம் தெரிவித்தேன். “நீ கவலை படாதே, நான் உன்னை நல்ல மார்க் எடுக்க வைக்கிறேன். நான் சொல்லிக் கொடுப்பதை நன்கு படி, கவனி. நான் சொல்கிற படி நட, தேவையெனில் தினம் உனக்கு டியூசன் எடுக்கிறேன்” என்றார்.
அதன்படியே S.S.H.C யில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று PSG பொறியியல் கல்லூரியில் BE பட்டம் பெற்றேன். சுயமாக தொழில் செய்து இன்று நல்ல நிலையில் உள்ளேன். காரணம் என் ஆசான். என் வாழ்நாளில் மறக்க முடியாத என் ஆசான் தற்போது பூரண சுகத்துடன் உள்ளார். 20.07.2019 அன்று 100வது பிறந்த நாளை கொண்டாடினோம். இந்த நல்ல நாளை நினைவு கூறுவது அவருடைய மாணாக்கனான எனது கடமை.
ஆசான் ளீs நான் படித்த போது மிகவும் வறுமையில் இருந்தார். படிப்பதற்கு கூட கடுமையான போராட்டம். இது அவர் மனதை பாதித்தது. எனவே தன்னிடம் படிக்கும் மாணவர்கள் அது போல துன்புற கூடாது என்பது அவரது மனதில் ஆழமாக பதிந்து விட்டது. அவரது வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாக பார்ப்போம். 20.07.1920-ல் புதுக்கோட்டையில் பிறந்தவர். கூட பிறந்தவர்கள் 7 பேர். 4 சகோதரர்கள், 1 சகோதரி பெரியம்மை தாக்கத்தால் இறந்து விட்டார். அந்த அதிர்ச்சியில் தந்தையும் மாண்டு விடுகிறார். அன்னையின் பராமரிப்பில் வளர்கின்றனர். அண்ணனுக்கும் இவருக்கும் வயது வித்தியாசம் 15 ஆண்டுகள்.
பள்ளி படிப்பை முடித்து 1936ல் செயின்ட் ஜோசப் கல்லூரியில் இன்டர் மீடியட் படித்தார். பின் 1938ல் ஙிகி சேர்ந்தார். கல்லூரியின் முதல்வர் ஜெரோம் டிசௌசா நல்ல சிவப்பு நிறம், நல்ல உயரம் மிகவும் கண்டிப்பானவர். ஒவ்வொரு மாணவனையும் பெயர் சொல்லி அழைக்கும் ஆற்றல் பெற்றவர். வறுமையின் காரணமாக படிப்பை தொடர முடியவில்லை. முதல்வரிடம் தெரிவிக்க அவர் முன் போய் நின்றார். தலையில் குடுமியுடன் கிளிசலுடன் கூடிய சட்டையுடன் பரிதாபமாக இருந்தார். கல்லூரியின் கட்டணம் செலுத்தாதவர்களின் பட்டியலில் இவர் பெயர் வந்துவிட்டது. இவர் இருந்த நிலை இவர் நிலையை பறை சாற்றியது. முதல்வர் நீ தொடர்ந்து படி கல்லூரி கட்டணத்தை நானே சொந்த பணத்தில் கட்டி விடுகிறேன். உனக்கு ஸ்காலர்ஷிப் வழங்க ஏற்பாடு செய்து விடுகிறேன். நீ நன்றாக படி என்றார். முதல்வர் இவருக்கு கல்வி கடவுளாக தான் தெரிந்தார். நன்றி தெரிவித்து விட்டு சென்றார். முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.
ரயில்வே துறையில் TTR பணி கிடைத்தது. மாலையில் வீட்டிற்கு திரும்பும் போது கல்லூரி முதல்வர் அனுப்பிய ஆள் நின்று கொண்டு இருந்தார். கடிதம் கொடுத்தார். கணக்கு வாத்தியார் வேலை மாதம் ரூ.300 சம்பளம். ரயில்வேயில் சேராமல் கல்லூரியில் சேருகின்றார். அதுவே ஆசிரியர் வாழ்வில் ஒரு திருப்புமுனை.
10 ஆண்டுகள் கழித்து காரைக்குடி கோனாபேட் என்னுமிடத்தில் இருந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் வேலை. மாதம் ரூ.130 சம்பளம். பின் கோவைக்கு வந்து. 1962ல் பணி தேடினார். தூய மைக்கேல் உயர்நிலை பள்ளியில் வேலை. வாழ்க்கை முறையே மாறியது. தனக்கென ஒரு தனித்துவ ஆடையை அணிந்தார். இவர் சொல்லி கொடுத்த விதம் – மாணவர் பாராட்டினர். எல்லோரும் நல்ல மதிப்பெண் பெற்றார்கள். இந்நிலையில் உதவி தலைமை ஆசிரியர் மரணமடைய, அப்பதவி இவரை தேடி வந்தது. ஆம் தலைமை ஆசிரியரே இவர் வீட்டிற்கு சென்று, “உன்னை இன்றைய அசெம்பிளியில் உதவி தலைமை ஆசிரியராக நியமித்து அறிவிக்க போகிறேன். அதற்கு உன்னை தயார் படுத்திக்கொண்டு வா” என்றார்.
அன்றிலிருந்து பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் பாடம் நடத்துவதிலும் ஒரு தனித்தன்மையுடன் விளங்கினார். எந்த வகுப்பிலும் ஆசிரியர் நாற்காலியில் உட்கார்ந்ததே கிடையாது. போர்டில் எழுதிக்கொண்டு படம் போதிப்பார்.
1976 வரை பணி புரிந்து ஓய்வு பெற்றார். சும்மா இருப்பது இவருக்கு பிடிக்காது. தினமும் 1008 முறை ஸ்ரீ ராம ஜெயம் எழுதாமல் தூங்க மாட்டார். பென்சன் வாங்கும் போதும் நிறைய தான தர்மங்கள் செய்து வருகிறார். வசதியற்ற மாணவர்களுக்கு பள்ளி கட்டணத்தை காட்டியுள்ளார். இலவசமாக டியூசன் சொல்லி கொடுத்திருக்கிறார். தற்போதும் வேத பாட சாலைக்கு நன்கொடை அளித்து வருகிறார். கோவையில் உள்ள மகா சாந்தி என்னும் எரியூட்டும் அமைப்புக்கு மாதம் ரூ.500 வழங்கி வருகிறார். வருடத்தில் 4/5 பேருக்கு கண் அறுவை சிகிச்சைக்காக நன்கொடை கொடுத்து வருகிறார். தனது தள்ளாத வயதிலும் இச்சேவைகளை செய்து வருகிறார்.
தற்போதும் யாராவது சந்தேகம் கேட்டு வந்தால் அவர்களுக்கு சொல்லி கொடுக்கின்றார். இவரிடம் படித்த மாணவர்கள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகின்றனர். பத்ம ஸ்ரீ விருதும் பெற்றிருக்கின்றனர். இவரிடம் கல்வி கற்ற நாங்கள் இவருக்கு 100வது பிறந்த நாள் விழா எடுத்து வாழ்த்து கூறுவதை எங்களுக்கு கிடைத்த பெரும் பேரு என கருதுகிறோம். அவர் இன்னமும் வாழ வேண்டும்.
M.H. ஆலாலசுந்தரம்
இடையர் பாளையம்
98947 34433 / 97887 50000