நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்
நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்
நஞ்சுடனே யொருநாளும் பழக வேண்டாம்
நல்லிணக்கம் இல்லாரோ டிணங்க வேண்டாம்
அஞ்சாமல் தனிவழியே போக வேண்டாம்
அடுத்தவரை யொருநாளும் கெடுக்க வேண்டாம்
மஞ்சாருங் குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே.
(ப – ரை) நெஞ்சு ஆர – மனம் பொருந்த, பொய்தன்னை – பொய்யை, சொல்ல வேண்டாம் – சொல்லாதே.
நிலை இல்லா – நிலைபெறாத, காரியத்தை – காரியத்தை, நிறுத்த வேண்டாம் – நிலைநாட்டாதே.
நஞ்சுடனே – விடத்தையுடைய பாம்புடனே, ஒரு நாளும் – ஒருபொழுதும், பழகவேண்டாம் – சேர்ந்து பழகாதே.
நல் இணக்கம் – நல்லவர்களுடைய நட்பு, இல்லாரோடு – இல்லாதவர்களுடன், இணங்க வேண்டாம் – நட்புக்கொள்ளாதே.
அஞ்சாமல் – பயப்படாமல், தனி – தன்னந்தனியாக , வழி போக வேண்டாம் – வழிச்செல்லாதே.
அடுத்தவரை – தன்னிடத்து வந்து அடைந்தவரை, ஒரு நாளும் – ஒருபொழுதும், கெடுக்க வேண்டாம் – கெடுக்காதே.
மஞ்சு ஆரும் – வலிமை நிறைந்த, குறவருடை – குறவருடைய (மகளாகிய), வள்ளி – வள்ளி நாய்ச்சியாரை, பங்கன் – பக்கத்தில் உடையவனாகிய, மயில்ஏறும் பெருமாளை – மயிலின் மீது ஏறி நடத்தும் முருகக்கடவுளை, நெஞ்சே – மனமே; வாழ்த்தாய் – (நீ) வாழ்த்துவாயாக.