கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் உணவு பாதுகாப்பு துறையின் சார்பில் உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் / அரசு முதன்மைச் செயலாளர் அமுதா, அவர்கள் தலைமையில் ஹோட்டல் உரிமையாளர்கள், மளிகைக்கடை உரிமையாளரர்கள், உணவு வணிக சங்கங்கள், குடிநீர் பேக்கிங் உற்பத்தியாளர்கள், நெகிழி உற்பத்தியாளர்கள், நடைபாதை கடை உரிமையாளர்களுடன் நெகிழி ஒழிப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், உணவு பாதுகாப்புத்துறை ஆணையர்/அரசு முதன்மைச் செயலாளர் அவர்கள் தெரிவித்ததாவது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழகத்தில் சுற்றுச்சூழலை மேம்படுத்தவும், இயற்கை சமநிலை பாதுகாக்கும் நோக்கிலும், தமிழகத்தில் 01.01.2019 முதல் பிளாஸ்டிக் பொருட்களின் தடை உத்தரவினை சட்டப்பேரவையில் அறிவித்தார்கள். அதன்படி, அனைத்து மாவட்டங்களிலும், ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகின்ற டிசம்பர் மாதம் இறுதிக்குள் முற்றிலும் தடை செய்யப்பட உள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் உபயோகத்தினை தடுக்க மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் வழி காட்டும் குழு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது பயன்பாட்டில் இருக்கும் நெகிழிகளுக்கான மாற்று பொருட்களை பயன்படுத்தி உணவு வணிகத்தை சிறப்பாக செய்து இயற்கை வளத்தை காக்க வேண்டும்.
உணவு பொருள்கள் பொட்டலமிட பயன்படுத்தும் நெகிழி, நெகிழியாலான குடிநீர் டம்ளர், பாக்கெட் குடிநீர், நெகிழியாலான தேனீர் கரண்டி, தெர்மாகோல் பொருட்கள் அனைத்தும், நெகிழியாலான பூசப்பட்ட காகித குவளைகள், மேசையின் மீது நெகிழியாலான உணவு விறிப்பான், உணவு பொருள் மீது போர்த்தப்பட்ட நெகிழி தாள்கள், நெகிழி பைகள், கையுறை, தலைகவசம், டீ, குளிர்பானங்கள், பார்சல் செய்யப்படும் நெகிழி போன்றவைகள் தடை செய்யப்பட உள்ள நெகிழிகள் ஆகும்.
மேலும், மேற்கண்ட பொருட்களுக்கு மாற்று பொருட்களான வாழை இலை, துணி பைகள், பாக்கு மட்டைகள், சில்வர் டம்ளர், கண்ணாடி டம்ளர், மண்குவளைகள், பீங்கான் டம்ளர், எவர் சில்வர் கரண்டி, எவர் சில்வர் டப்பா, காகித பொருட்கள், பாக்கு தட்டு, காகித விறிப்பான், எவர்சில்வர் பாத்திர மூடிகள், காகித பைகள், சணல் பைகள், துணி கவசம், தூக்கு வாளி, மற்றும் எவர் சில்வர் பொருட்கள், பீங்கான் பொருட்கள் உபயோகப்படுத்த வேண்டும். நெகிழிப்பைகளில் உற்பத்தி செய்யப்படும்போது சேர்க்கப்படும் பிஸ்பீனால்-ஏ என்ற வேதிப்பொருளால் நெகிழியில் சூடாகவோ, குளிர்ச்சியாகவோ உணவை அடைத்து வைத்து உண்ணும் போது நெகிழியானது வேதிவினை புரிந்து நம் உடலில் பல நோய்களுக்கு காரணமாகவும், மனித மூளை மற்றும் இனப்பெருக்க மண்டலத்தை பாதிக்கின்றது. மார்பக புற்றுநோய் மற்றும் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைதல், ஹார்மோன்களில் மாற்றம் ஏற்படுத்துவதோடு கேன்சர் போன்ற வியாதியை உருவாக்கும் தன்மையை கொண்டதாகவும் உள்ளது. மேலும் இது வளரும் நமது சந்ததியினரையும் வெகுவாகப் பாதிக்கிறது. நெகழி உபயோகப்படுத்துவதை தவிர்த்தல் என்பது நீர் நிலைகள், சுற்றுபுறச் சூழல், மண்வளம் மற்றும் விலங்கினங்கள் போன்றவற்றின் சுகாதாரம் காக்கப்படுவதற்கு நாம் ஆற்றும் சேவையாகும். எனவே, பொதுமக்கள், உணவு வணிக சங்கங்களும், முற்றிலுமாக நெகிழி உபயோகப்படுத்துதலை தவிர்த்து அனைவரும் இதற்கு முழு ஒத்துழைப்பு அளித்து சுகாதாரமாக வாழந்திடுவோம் என உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் / அரசு முதன்மைச் செயலாளர் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட உணவுப்பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)(பொ) ராஜன், உணவு பாதுகாப்பு அலுவலர்கள், குடிநீர் பேக்கிங் உரிமையாளர், உணவு பாதுகாப்பு அலுவலர்கள், தன்னார்வலர்கள், நெகிழி உற்பத்தியாளர்கள், நடைபாதை கடை உரிமையாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.