சென்னை மாநில கல்லூரியில் ஆராய்ச்சியாளராக இருந்தேன். நானும் சக நண்பரும் வளாகத்திற்கு உள்ளேயே தேனீர் அருந்த சென்றோம். மெரினா சாலையில் மாநில முதல்வரின் கார் சென்றது. எங்களது ஆராய்ச்சி பற்றிய பேச்சு அபூர்வமாக அரசியலுக்கு திரும்பியது.
1962 இந்தியா – சீனா டாய் பாய் மாறி போர் போர் என்று முரசொலித்து அமைதி திரும்பியதும் சீனா போர் நிதி நாடு முழுவதும் பெறப்பட்டது. நங்களிருவரும் பஸ் 20 B ஏறி செக்ரட்ரியேட் சென்று முதல்வர் அறை முன் நின்றோம்.
செய்தி உள்ளே அனுப்ப எங்களை பெருந்தலைவர் அழைத்தார். நாங்கள் நகைகள் நன்கொடையாக கொடுக்க வந்துள்ளோம் என்றதும் மற்றோரு மணி, ஒரு அலுவலர் வந்தார். இவர்கள் நன்கொடை அளிக்க வந்திருக்காங்க அவற்றை பெற்று உரிய இரசிது கொண்டு வாங்க. பின்னர் எங்களிடையே உரையாடினார். வாழ்வில் மறக்க முடியாத சிறு துளிகள்.
எனது கேரளா நண்பரிடம் சில விவரங்களை கேட்டார். என்னிடம் திரும்பி உங்கள் ஊர் எது என்றார். பாலப்பட்டிக்கு அருகாமையில் காவிரி கரையில் உள்ள களிமேடு என்ற குக்கிராமம் என்றேன்.
பாலப்பட்டியில் நஞ்சைய கவுண்டர் எப்படி இருக்கிறார் என்றார். நன்றாக இருக்கிறார். அவர்தான் (மறைந்த றி. ஷி கைலாசம், உச்ச நீதிமன்ற நீதிபதியின் சகோதரர்) எங்கள் கிராம பஞ்சாயத்து தலைவர் என்றேன். ஆமா, செங்கப்பள்ளி பக்கம் தானே? அங்கு ராமசாமி கவுண்டர், மணியாகாரர் எப்படி இருக்கிறார். சர்க்கரை வியாதி பரவாயில்லையா? நன்றாக இருக்கிறார், என்னுடைய நெருங்கிய உறவினர் என்றேன்.
தமிழகத்தின் வரைபடம், வாக்காளர் சுக துக்கம் அவர் உள்ளத்தில் இருந்து வெளிவருகிறது. அடுத்து மோகனூர் சர்க்கரை மில் எப்படி இயங்குகிறது என்றார். நன்றாக செயல்படுகிறது. எங்களது வயல் கரும்பு அங்கு தான் போகிறது என்றேன். காவிரி கரையில் உள்ள மோகனூர் வாழை, கரும்பு, வெற்றிலை சிறப்பான வேளாண் பயிர்கள் ஆகும். இதோ அவர் வேளாண்மை வல்லமை, உற்பத்தியை வியாபாரம் ஆக்கும் திட்டங்களும் கண் முன் ஓடுகிறது.
இவர் ஆட்சி காலத்தில் தான் நெய்வேலி திட்டம், பெரம்பூர் இரயில் பெட்டி நிறுவனம், திருச்சியில் பெல் தொழிற்சாலை, கல்பாக்கத்தில் அணுமின் நிலையம், நீலகிரியில் போட்டோ பிலிம் நிறுவனம், கிண்டியில் டெலி பிரின்டெர்ஸ், சேலம் உருக்காலை மற்றும் என் அறிவுக்கு எட்டாத முதலீடுகள் தொழில் நிபுணர் இதோ நீர் வளத்தில் இறங்குகிறார்.
மறைந்த ஏரி, குளங்கள் பற்றி விவாதிக்க மேட்டூர் கால்வாய் திட்டம், பவானி சாகர், காவிரி டெல்டா அபிவிருத்தி, மணிமுத்தாறு, அமராவதி, வைகை திட்டங்கள் மற்றும் சாத்தனூர், கிருஷ்ணா, ஆரணி ஆகிய நீர் பாசன திட்டங்கள் அளித்து சென்றுள்ளார்.
இவ்வளவு செய்தோரையும், இரண்டாவது முறை ஜனாதிபதியாக அப்துல் கலாமையும் மறந்தது வேதனையே. லஞ்சத்தை எவ்வாறு கையாண்டார்?
ஒரு ஜப்பான் நிறுவனத்துடன் 10 சர்க்கரை ஆலைகளுக்கு உடன்பாடு நிறைவேறியது. “நாங்கள் ஒவ்வொரு ஆலைக்கும் 10% தொகை முதல்வருக்கு கொடுப்பது பழக்கம் என்றனர். அதை மறுத்தால் பணம் எங்கெல்லாமோ புகுந்துவிடும், அந்த கையூட்டு பணத்தில் மோகனூரில் ஒரு சர்க்கரை ஆலை கட்டி கொடுங்கள் என்றார்.
இத்தகைய பெருந்தலைவரை மாணவர்கள் படிக்கிறார்கள். ஆனால் அதில் உயிர், தேசப்பற்று, கடமை உணர்வு புகுத்தி காமராஜரை முன் நிறுத்த வேண்டியது என்னை போன்ற ஒவ்வொரு ஆசிரியரின் கடமை ஆகும். எங்கு அவர் படத்தை பார்த்தாலும் இளைஞனுக்கு மரியாதை செலுத்த உள்ளிருந்து ஒரு உணர்வு வர வேண்டும்.
—முனைவர். கே. கே. இலட்சுமணன்
பார்ஸன் கலர்ஸ்