சூரியனின் தென்திசைப் பயணத்தை ‘தட்சிணாயன புண்ணிய காலம்’ என்று குறிப்பிடுவர், தட்சிணாயன புண்ணிய காலத்தின் முதல் மாதமான அடியில் விவசாயிகள் உழவாரப் பணிகளைத் தொடங்குவார்கள். விவசாயம் செழிக்க தேவையான தண்ணீரை வழங்கும் நதிகளை முன்னோர்கள் வழிபட்டனர். அதற்குரிய நாளாக ஆடி 18-ந் தேதியை தேர்ந்தெடுத்தனர். விழாவிற்கு ‘ஆடிப்பெருக்கு’ என்ற பெயரிட்டனர். இந்த நாளில் தொடங்கும் செயல்கள் இனிதே நிறைவேறும் என்பது ஐதீகம். அன்றைய தினம் காவிரியில் நீராடி, காவிரி அன்னையை வழிபட்டு மஞ்சள், குங்குமம், மலர், வஸ்திரம் சமர்ப்பிப்பார்கள். புதுமணத் தம்பதிகள் புது மஞ்சள் கயிறு மாற்றிக் கொள்வர்.
காவிரிக் கரையோரம் உள்ளவர்கள் மட்டுமே ஆடிப்பெருக்கைக் கொண்டாட வேண்டும் என்பதில்லை. ஆடிப்பெருக்கு பூஜையை நம் வீட்டிலும் எளிய முறையில் செய்யலாம். ஒரு செம்பில் நிறை குடத்தில் இருந்து தண்ணீர் எடுத்து, அதில் அரைத்த மஞ்சளை சிறிதளவு கரைக்க வேண்டும். அந்த நீரை, விளக்கின் முன் வைக்க வேண்டும். தண்ணீரில் உதிரிப் பூக்களைப் போட வேண்டும். கற்பூர ஆரத்தி அல்லது நெய்தீபம் காட்டி கங்கை, யமுனை, நர்மதை, காவிரி, வைகை உள்ளிட்ட புண்ணிய தீர்த்தங்களை மனதில் நினைத்து வழிபாடு செய்ய வேண்டும். காவிரியையும், தாமிரபரணியையும் நமக்களித்த அகத்திய முனிவரை மனதார வணங்குங்கள். பூஜை முடிந்ததும் செம்பிலுள்ள நீரை செடி, கொடிகளில் ஊற்றி விட வேண்டும். அன்று சர்க்கரை பொங்கல் நிவேதனம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் செல்வம் கொழிக்கும் என்பது நம்பிக்கை.