கோவை மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் தயாரிக்கும் பொருட்களுக்கு விற்பனையை ஊக்கப்படுத்தும் வகையில் அரசு உதவி பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் த.ந.ஹரிஹரன் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
மகளிர் சுய உதவி குழு மூலம் பொருட்கள் தயாரிக்கும் மகளிர் சுய உதவிக்குழுக்கள், குழு உறுப்பினர்கள் மற்றும் பெண் தொழில் முனைவோர் மூலம் தயாரிக்கப்படும் பொருட்களான துணிப்பைகள், அழகுசாதன பொருட்கள், கைவினை பொருட்கள், பாக்கு மட்டைகள், உணவு பொருட்கள் போன்றவற்றை மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கம் மூலம் விற்பனை செய்வதற்கு உரிய உதவிகள் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதில் பொருட்களை விற்பனை செய்வதற்கு ஏதுவாக பொருட்காட்சிகள், கல்லூரி சந்தைகள் மற்றும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து கண்காட்சிகள் நடத்தவும், பல்வேறு தனியார் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படவும் பொருட்களை தயாரிப்பதற்கு தேவையான கடனுதவிகளை வழங்கவும், மாவட்ட, மாநில, தேசிய அளவிலான விற்பனை கண்காட்சிகளுக்கு பொருட்களை அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், பொருட்கள் தயாரிப்பதற்கு தேவையான தொழில் முனைவோர் பயிற்சி, உற்பத்தி தொடர்பான பயிற்சி, சந்தைப்படுத்துவதற்கு உரிய பயிற்சிகள், வங்கி கடனுதவி பெறுவதற்கான ஆலோசனைகள் வழங்கப்படும். மேலும், களப்பயணம் மேற்கொள்ள உரிய உதவிகள் செய்யப்படும்.
இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ள விருப்பமுள்ள கோவை மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்புற பகுதியில் உள்ள பெண்கள் மகளிர் திட்டம் அலுவலகம், பழைய கட்டிடம், இரண்டாம் தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கோயம்புத்தூர். தொலைபேசி எண்: 0422-2301855 என்ற முகவரியில் நேரிலோ அல்லது தொலைபேசி மூலம் விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.